நம்பிக்கை >>

 


நம்பிக்கை, முன்னேற்றம் போன்ற உற்சாகமான விஷயங்களைப் பேசும் முன்பு கீழ்காணும் இரண்டு விஷயங்களைக் கட்டாயம் நாம் மனதில் கொள்ள வேண்டும்.

ஒன்று:
வாழ்க்கையில் தொடர்ந்து போராடும் சந்தர்ப்பங்களில் ஒரு சலிப்பு தோன்றும். எல்லாக் கதவுகளும் சாத்தப்பட்ட ஒரு நிலையில் பயமும் திகைப்பும் தோன்றும். உறவுகளாலோ நண்பர்களாலோ ஏமாற்றப்பட்ட நிலையில் வெறுமையும் விரக்தியும் வரும். இந்தக் கட்டங்களைத் தன் வாழ்நாளில் கடக்காத ஒரு மனிதன் இருக்கவே முடியாது.

 
இரண்டு:
வாழ்க்கை எத்தனை தீராத அழகுகளை தன்னுள் கொண்டிருக்கிறதோ எத்தனை அன்பை வாரித் தருகின்றதோ அதே அளவிற்கு அவற்றிற்கு எதிரான விஷயங்களையும் தன்னிடம் வைத்திருக்கிறது. இதுவே யதார்த்தம்.

இந்த இரண்டு விஷயங்களையும் முழுமையாக அங்கீகரித்துவிட்டு வாழ்க்கையை நம்பிககையுடன் எதிர்கொள்வதற்கான வழிமுறைகளைப் பற்றி நாம் பேச ஆரம்பிக்கலாம்.

இவைதான் யதார்த்தம் என்றால் எதற்காக நம்பிக்கை கொள்ள வேண்டும் என்ற அடிப்படையான ஒரு கேள்வியை நீங்கள் முன் வைக்கலாம். உங்கள் கேள்வி உண்மைக்கு வெகு அருகாமையில் உள்ளது. ஆனால் உண்மை எது என்பதை அறிந்துகொள்ள இந்த கேள்விக்கு உங்கள் பதில் என்னவாக இருக்க முடியும் என்று யோசித்துப் பாருங்கள்.

உங்களுக்கு ஒரு விஷயம் புரியும். வாழ்க்கை ஒரு வழிப் பாதை. நீங்கள் நடக்க நடக்க உங்கள் பின்னால் உள்ள பாதை அழிந்துபோகும் ஒரு வழிப்பாதை. நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்தப் பாதையைக் கடக்கத்தான் வேண்டும். இங்கே ஏன் எதற்காக போன்ற கேள்விகளுக்கு இடமே இல்லை.

நம்பிக்கை வாழ்தலோடு பிரிக்க முடியாத உறவைக் கொண்டுள்ளது. ஏன் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்ற கேள்வியை எழுப்பும் அதே கணத்தில் வாழ்க்கை மீது அளவில்லாத நம்பிக்கையை நீங்கள் கொண்டிருக்கிறீர்கள்.

நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது இதுதான். நம்பிக்கை உங்களிடம் இல்லாத ஒரு விஷயம் அல்ல. அதைத் தேடி நீங்கள் எங்கும் போக வேண்டியதில்லை. உங்களிடம் உள்ள நம்பிக்கையை மீட்டெடுப்பது எப்படி?

அடுத்த மாதம் சந்திப்போம்.

-யமுனா


 


 
 

Copyrights @ 2014 Snehidhi. All Rights Reserved

Designed and Maintained By GNARITUS TECH

.