விருந்தினர் பக்கம் >>

 
காலங்காலம்

இன்னும் எழுந்திருக்கவில்லை கண்ணகி. அவள் மேனியெங்கும் படிந்திருந்த கடலின் தன்மை தனது அலைகளை விசிறியடித்துக் கொண்டிருக்கிறது. புறங்கழுத்தின் பின்புறம் பின்னலிலிருந்து விடுபட்ட கூந்தல் கடல் காற்றில் மெல்ல அசைகிறது. மெல்ல கருத்திருந்த அவளின் உடலில் ரோமங்கள் பொன்னிறமாய் சூரிய ஒளியில் குளித்துக் கொண்டிருந்தன. பூம்பட்டினத்து துறைமுகத்தில் கப்பல்களிலிருந்து இறங்கிய யௌவனர்கள் தங்களின் உயர்ந்த தோள்களை நிமிர்த்தி மணல்வெளியில் கால்புதைய நடந்துச் செல்கின்றனர். கடல் வீசும் அலைகளில் தவமியற்றும் கண்ணகி சிறிது நிமிர்ந்து பார்க்கிறாள். சிவந்த அடிவானத்தைப் போல நிறத்துடைய கால்கள் அவளை நோக்கி வருகின்றன. முட்டிக்குமேல் உறுதி படிந்த முறுக்கிய தசை நார்கள் அசைகின்றன. நீர் வரிகள் ஓடிய கண்களை, இமைகளை விலக்கி உயர்த்துகிறாள். மனசுக்குள் குதித்து கிளம்பியது உருண்டையான வெப்ப வடிவம். அடிவயிற்றின் தசை நரம்புகளை கையால் சுற்றி யாரோ இழுத்தது போன்ற உணர்வு அவளின் நாபிச்சுழியை வட்டமிட்டது. கண்களைப் பிடுங்கிக் கொண்டாள்.

யாரோ ஒரு முனிவரின் மனைவி சூரியனைப் பார்த்ததற்கே சாபம் பெற்ற கதையை அவன் சொல்லக் கேட்ட முதலிரவு ஞாபகம் வந்தது. ‘மாசறு பொன்’ என்று அவன் சொன்னது, ‘காசறு விரை’ என்று சொன்னது எல்லாம்தான் அப்படியே இருக்கின்றன. ஆனால் அவன்? இல்லை. இரவுகளின் பெரும்பாரங்கள் அவள் மீது இறங்கும்போதெல்லாம் அவளின் மேனியில் படிந்த பசலையின் நிறம் அவனை மேலும் ஞாபகத்தில் ஊட்டியது. அடிவயிற்றிலிருந்து புறப்பட்டு நாபியில் முடியும் மயிற்கொடியில் காய்ந்திருந்த அவனின் பற்குறிகள் உதிர்ந்து விட்டிருந்தன. அவை சிவந்த நிறத்திற்கு வந்திருந்தன. அன்று மாலை கடற்கரையிலிருந்து திரும்பி வீட்டிற்கு வந்து குளிக்கையில் வழக்கமாய் பார்க்கும் அதே எண்ணத்தில்தான் அந்தப் பற்குறிகளைப் பார்த்தாள் கண்ணகி. சிவந்திருந்த அவற்றைக் கண்டவுடன் கடற்கரையில் அவள் பார்த்த கால்கள் நினைவுக்கு வந்தன. சிவந்த அவை இறக்கைகளாகி வானில் பறக்க கண்ணகி நீர் நனைத்தவுடலோடு மேலே பார்த்தாள். நிலா அவளது உடலை தன் ஒளிச்சாட்டையில் விளாசிக்கொண்டிருந்தது.

வீட்டிற்குள் சென்று சந்தன நெருப்பினைக் கிளர்த்தி அகில் துகள்களைத் தூவி புகையில் மூழ்கினாள். விழித்துக்கொண்டிருந்த அந்த இரவில் அவளும்தான் தூங்கவில்லை. எத்தனையோ இரவுகள் தூங்காமலேயே கழிந்திருக்கின்றன. இன்றைய இரவு ஏனோ தெரியவில்லை, புதிய மன நிலையின் புரள்வில் தகிக்கிறது. கண்ணகிக்கு மீண்டும் தன்னை விடுவிக்க எண்ணி தவிக்கிறாள். அடக்க முடியாத திமிறலுடன் ஒரு போர்க்களத்தை அமைத்து விளையாடுகிறது அவள் உடல்.

யாரோ வருகிற சப்தம் அவளின் செவிப்புலனில் தடம் பதிக்க, தெரிந்த காலடியோசைதான் என தீர்மானித்து மெல்ல திறக்கிறாள். அவன்தான். வரமாட்டான் என்று தீர்மானித்த அவன்தான். மாதவியின் விழிக்குளத்தில் விழுந்தவன். இனி நம்மிடம் ஏதுமில்லாமல் இருக்கும்போது எதை நினைத்து வந்தான் என்ற எண்ணம் அவளுக்குள் ஓடியது. கண்ணகி ஓடினாள். அவன் கால்களில் விழுந்தாள். கண்ணீர்த்துளிகள் அவன் கால் விரல்களில் பட்டுத் தெறித்தன. மௌனத்தின் வெளி அவர்கள் இருவருக்கும் இடையே ஒரு நதியாய் ஓடியது.

கண்ணகியைப் பார்த்து ‘போகலாம்’ என்றான். கிளம்பினாள். மதுரைக்குச் சென்றனர். சிலம்பைக் கேட்டான். கொடுத்தாள். சிலம்பற்ற கால் ஒன்றுடன் நடந்தாள். மதுரை கொன்றது அவனை.

தூங்காமல் விழித்திருந்தாள் திரௌபதி. இந்த நேரத்தில் சந்திக்கலாம் என்று கிளம்பியது சாரங்கப் பறவை. சாரங்கப் பறவைக்கு பேசத் தெரியும். திரௌபதி துயிலின்றி இருப்பாள் அவளிடம் பேசலாம் என எண்ணியது. அவளின் கனவானவன் அர்ஜுனன். ஆனால் தன் காதலை எப்படி துறக்க முயல்கிறான்? கேள்விகள் நட்சத்திரங்களாய் மின்னுகின்றன. சாரங்கப் பறவை மாடத்தின் மீது வந்து அமர்ந்தது. ‘திரௌபதி..! நீ சொல்லிவிடு குந்தியிடம்..! அவளை எதிர்த்துப் பேசுவது குறித்து கவலை கொள்ளாதே. அது உன் காதல். நீ அவனை மட்டுந்தான் நேசிக்கிறாய்.’ பறவை பேசியது. அவள் மௌனமாய் இருந்தாள். எப்படி அய்ந்து பேருடன் வாழ்வது? அவன் உறைந்திருக்கும் உள்ளத்தில் மீதிபேரை எந்த இடத்தில் கொண்டு கொட்டுவது? புரியாமல் தவித்தது அவள் மனம்.

‘ஏண்டி இப்படி மூஞ்சிய உம்மென்னு வ்ச்சிருக்கே?’
எதுவும் பேசாமல் இருந்தாள்.
‘ஏ.. சொல்லு.. என்னா பெரிய இவளாட்டம்?’
‘என்னத்த சொல்றது? அவனுக்கு எங்க மோதிக்கினாலும் எங்கிட்டாதான் நொட்டுவான்! நேத்தெல்லாம் ஒதச்சான். அவங்க அண்ணங்கூட சண்டயாம்.’
‘அப்டியா?’
‘ஆமா எக்கா..’
‘நீ பரவாயில்ல. நா என்கூட்டுகாரங்கிட்ட பேசரதேயில்ல. எப்படியோ போவட்டும்.’
மௌனத்தின் கோடுகள் அவர்களின் உதடுகளைத் தைத்தன. அமைதியின் ஓங்காரத்தில் கிளம்பியது கண்ணீர் அவர்களின் கண்களில்.
காலத்தின் கண்களிலும் வழிந்துக் கொண்டிருக்கிறது காலங்காலமாய்.


சுகிர்தராணி.
(இவரைப் பற்றி )பள்ளிப் பரீட்சைத் தோல்வி, வாழ்க்கை தோல்வியல்ல!

பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர் தற்கொலை சாவு எண்ணிக்கைகள் நாள்தோறும் அதிகரித்து வருகின்ற துர்பாக்கிய நிலை நிலவுகிறது. பள்ளிப் பரீட்சைத் தோல்வி வாழ்க்¬த் தோல்வியல்ல. தேசிய குற்றவியல் குழு அறிக்கைப்படி தமிழ்நாட்டில் மட்டும் வருடத்திற்கு சராசரியாக 200 மாணவர்களும் இந்தியா முழுவதும் 2000 மாணவர்களும் தற்கொலை செய்யும் நிலை உள்ளது. தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெறுதல், தேர்வில் தோல்வி, பெற்றோர்களின் அதிக எதிர்பார்ப்பு மற்றும் அதிக கண்டிப்பு, எதிர்காலம் பற்றிய் தெளிவற்ற சிந்தனை, சகமாணவர்களுடன் தவறான ஒப்பீடு போன்ற பல்வேறு காரணங்களின் அடிப்படையில் மாணவர்களின் தற்கொலை சாவுகள் நிகழ்சின்றன.

வெற்றி, தோல்வி இரண்டையும் சமநிலையில் எதிர்நோக்கும் பார்வை, விடா முயற்சி, சகிப்புத்தன்மை, மூடநம்பிக்கையைத் தவிர்க்கும் சிந்தனை, கல்வி மட்டுமே வாழக்கையல்ல போன்ற சிறந்த எண்ணங்களை பள்ளி, கல்லூரி மற்றும் இல்லங்களில் மாணவர்களுக்குப் போதிக்க வேண்டும். நமது வாழ்வின் மிகப்பெரிய சிறப்புமிக்க புகழ் எதில் உள்ளது என்றால், கீழே விழாமல் இருப்பது அல்ல, கீழே விழும் ஒவ்வொரு முறையும் உடனே எழுந்து விட்டோம் என்பதில்தான் உள்ளது என்றார் நெல்சன் மண்டேலோ. சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ஐ.ஏ.எஸ் தேர்வில் சாதனை படைத்த தமிழகத்தைச் சேர்ந்த ரஞ்சித் குமார் மூன்று முறை முதல் நிலை தேர்வில் தோற்று பின் 6-வது முயற்சியில் ஐ.ஏ.எஸ் ஆகியிருக்கிறார்.

மாணவர்கள், ஒரு மணி நேரம் ஏதேனும் ஒரு விளையாட்டில் ஈடுபடும்போது கிடைக்கின்ற வெற்றி-தோல்வி பற்றிய சுய அனுபவம் சிறந்த சிந்தனை தூண்டும் செயலாக அமையும். 10-ஆம் வகுப்பு தேர்ச்சியடையாத சினேகிதிகள் கவலைப்படவேண்டாம். அடுத்த துணைத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுவிடலாம். இது சம்பந்தமாக உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் அதாவது பரீட்சைவிண்ணப்பம் பெற டீயூசன் வகுப்புகள் போன்றவற்றுக்கு எங்களை அணுகவும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் கூட தொழிற் பயிற்சிகளை பெற்றிடலாம். உதாரணமாக ஆடை வடிவமைத்தல், கம்ப்யூட்டர் இயக்குதல் நர்ஸ் உதவியாளர், பயிற்சி பெற்ற வீட்டு பணியாளர், கைவேலைகள் (பேப்பர் பேக், சணல் பேக், பைல், ஸ்கிரீன் பிரிண்டிங்) இது போன்றவற்றில் சேர்ந்து படிக்க விரும்பினாலும் உடனடியாக எங்களை அணுகவும்.

பெண்களும் ஆளுமையும்

தீர்மானங்களை எடுப்பதும், அதைச் செயல்படுத்தும் (அல்லது செயல்படுத்தாமல் இருக்கும்) விதத்தையே ஆளுமை என்கிறோம். குடும்பம், சமுதாயம் நாட்டின் பல்வேறு அதிகார மட்டத்திலும் மற்றும் சர்வேதச அளவிலும், கிராம அளவிலான சிறிய பெரிய கூட்டமைப்புகளிலும், நெட்வொர்க்குகளிலும், தொண்டு நிறுவனங்களிலும் ஆளுமை அவசியம். முன்னேற்றமடைந்து கொண்டிருக்கும் சமுதாயத்தின் வளர்ச்சிக்கு சிறந்த ஆளுமை அவசியம். எளிய மக்கள் முன்னேற்றத்திற்கும் மனித நேயத்தை மேம்படுத்தவும் ஆளுமை அவசியம்.

சிறந்த ஆளுமை என்பது எளிதில் பெறக் கூடியதும், மனசாட்சி ஏற்றுக் கொள்ளக்கூடியதும், தனி நபரின் மனித உரிமைகளை காத்து மதிப்பதும், வெளிப்படையாக இருப்பதும், பலனளிக்கக் கூடியதும் சரியான விதத்தில் தொடர்பு கொள்வதும், அனைவரையும் இணைக்கக் கூடியதும், சட்டப்படி நடப்பதும், அதிகார பூர்வமுடன் நடப்பதும் ஆகும். ஆளுமை, லஞ்ச ஊழலை தடுத்து, பெண்கள், குழந்தைகள், தலித்துகள், மதத்தால் (சிறுபான்மையினர்) மற்றும் சமுதாயத்தில் விடுபட்டவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதன்படி முடிவு எடுப்பதாகும். இது, 20 இன்றைய மற்றும் நாளைய தேவைக்கேற்ப செயல்படுவதாகும். பல சமுதாயங்களில் பெண்களுக்குத் தேவையான சத்துணவு, தகவல் அறியும் உரிமை, சுகாதார சேவைகள், கல்வி, பொருளாதாரம், சொத்து உரிமை, குழந்தைப் பெறுவதற்கான உரிமை, குடும்பக் கட்டுப்பாடு ஆகிய உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. ஆண், பெண் சம பங்கு எடுத்து செயல்படும்போதுதான் சமுதாயம் முழுமை அடைவதற்கும், குடியரசை வலுப்படுத்தவும் முடியும். அது சரியான வகையில் செயல்பட முடியும். பெண்கள் அரசியலில் முக்கியமான தீர்மானத்தை நிறைவேற்றும் பொறுப்பு வகிக்கும்போதுதான் இன்றைய அரசியல் நோக்கத்தை மாற்றி ஒட்டுமொத்த சமுதாய வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு கல்வி, சுகாதாரம், வறுமை ஒழிப்பு, சுற்றுச் சூழல் பாதுகாப்புப் போன்றவற்றை செயல்படுத்த முனைவர். உலக அமைதிக்கும் ஒட்டுமொத்த மனித நேய வளர்ச்சிக்கும் பெண்களின் பங்கேற்பும் கண்ணோட்டமும் இல்லாமல் சாத்தியமில்லை. எனவே, பெண்களின் ஆளுமை, குடும்பம், சமுதாயம், அரசாங்கத்தின் பல்வேறு நிலைகளிலும் அவசியம். கடந்த 40 ஆண்டுகளில் பல்வேறு சமுதாயங்களில் பல பெண்கள் அமைப்புகள் உருவாக்கப்பட்டு அதன் தலைமையில் பெண்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் தலைமை உருவாகியுள்ளது. இதனால், பெண்களிடம் தன்னம்பிக்கையும் தலைமை ஏற்கும் துணிவும் வளர்ந்துள்ளது.

தனி ஒருவருக்கு தன் உள்ளுணர்வையும், சுய மரியாதையும் மதித்து, அதற்கேற்ப தனக்கும் தன்னைச் சார்நதவர்களின் வளர்ச்சியை முன்னிறுத்தி தீர்மானிப்பது, லட்சியத்தை நோக்கி செல்லும்பொழுது ஏற்படும் தடைகளை எதிர்நோக்கும் தைரியத்தை மேம்படுத்துவது, மற்றவர்களை கவரும் ஆற்றலும் சமுதாய நலனுக்காகவும், மேம்பாட்டிற்காகவும், வாத விவாத்தினால் வெல்லும் திறனும், குடும்பம், சமுதாயம் மற்ற பிற அமைப்புகளிலும் சரிவர முடிவெடுப்பதே ஆளுமை ஆகும். கலாச்சார ரீதியாக ஆணாதிக்க சிந்தனையில் உரிய வளர்ப்பு முறையில் உள்ள பெண்களுக்கு மேற்கூறிய ஆளுமையை வளர்த்துக்கொள்ள சரியான வாய்ப்புகள், அவர்கள் குடும்பத்திலேயே உண்டாகுமானால் அவர்கள் ஒரு சமுதாயத்தை, அரசினை தங்கள் அலுவலகத்தை ஆளுமை செய்ய முடியும். பொதுவில் பிறர் நலனை கருத்தில் கொள்பவர்களாக பெண்கள் இருப்பதால் ஆளுமைத் தன்மை பெண்களுக்கு சிறப்பாக அமையும்.

 
 

Copyrights @ 2014 Snehidhi. All Rights Reserved

Designed and Maintained By GNARITUS TECH

.